தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக, இந்தாண்டு தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா , பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் செமஸ்டர் தேர்வை ரத்து செய்துள்ளன. மேலும் பல மாநிலங்கள் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் ரத்து செய்யலாம் என்கின்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு மாநிலங்களுக்குத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.