முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார். அதன்படி, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும், சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாகப் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70 ஆயிரம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய எஸ்எம்எஸ் மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.
மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.