சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சிறையிலேயே அடுத்தடுத்து மரணமடைந்தனர். இவர்கள் இருவரும் காவல் துறையினர் தாக்கியதால்தான் உயிரிழந்துவிட்டனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இச்சூழலில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்னை தேசிய அளவில் கவனம் பெற்றதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி இன்று கூறியுள்ளார்.
இதனிடையே நேற்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர், காவல் துறையினர் தாக்கியதால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று கடிதம் எழுதிவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த மூவர் இறந்த ஈரம் காய்வதற்குள் தென்காசியில் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இவரின் இறப்புக்கும் காவல் துறையினரே காரணம் எனக்கூறி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மே 10ஆம் தேதி விசாரணைக்காக குமரேசனை அழைத்துச்சென்ற காவல் துறையினர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளதாகவும் அறியமுடிகிறது.