இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”பூனை கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு போகுமோ? - என்றொரு சொலவடை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசும் அப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது.
கரோனா பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக, நோய்த்தொற்று குறைந்துவருகிறது அல்லது நோய்த்தொற்றே இல்லை என்று போலியாக வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது அரசு.
மே 7ஆம் தேதி 14 ஆயிரத்து 102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய தகவலின்படி, 8 ஆயிரத்து 270 எனக் குறைந்துள்ளது.
பரிசோதனைசெய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 விழுக்காடு குறைத்துள்ளது. அதனால் கரோனா பெருந்தொற்று எண்ணிக்கையும் குறைந்துவருவதாகக் காட்டுகிறார்கள்.
பரிசோதனைகளைப் பரவலாக அதிகப்படுத்திய பிறகும், பெருந்தொற்று இல்லை என்று நிரூபிப்பதுதான் நேர்மையான அரசாங்கத்தின் நெறியாக இருக்க முடியுமே தவிர; பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சிசெய்வது, விபரீதத்தையே விளைவிக்கும்.
இது சாதனை அல்ல; வேதனை. கரோனா பெருந்தொற்றுப் பரவல் குறித்த அச்சம் சிறிதும் குறையாத ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்கு என்று பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் ‘வாட்ஸ்அப்' மூலமாக அனுப்பிவைக்கும் காணொலி பதிவுகளைப் பார்த்த பிறகும் முதலமைச்சருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை.