சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளிம்பு நிலையில் அடிப்படை உரிமைகள் இன்றி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவ மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன்.
2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் “நரிக்குறவர் உள்ளிட்ட மக்கள் பயனடைய அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்” என்று சொல்லியிருந்தோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த 19.3.2022 அன்று பிரதமருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன்.
அதில் “1965-இல் லோகூர் குழுவும்” “1967-இல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவும்”, பிறகு தமிழ்நாடு அரசும், “2013-இல் ஒன்றிய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டிருந்ததையும்” சுட்டிக்காட்டி, “விரைவில் குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர் மக்களுக்கு” பழங்குடியினர் தகுதி அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
இதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் முயற்சிகளின் விளைவாக, கழகத்தின் முப்பெரும் விழா விருதுநகரில் நடைபெறுகின்ற இந்த வேளையில், இந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்காகவும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்காகவும் நடத்தி வந்த போராட்டத்திற்கு இப்போது வெற்றி மாலை கிடைத்திருக்கிறது.