தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் எம்.பி.  மு. இராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்! - mla

சென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. இராமநாதனின் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இரங்கல்

By

Published : May 10, 2019, 1:53 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான "கோவைத் தென்றல்" மு. இராமநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துடி துடித்துப் போனேன். துயரம் என்ற மகாசமுத்திரத்தில் திசை காண முடியாமல் மூழ்கியிருக்கிறேன்.

அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மு.ராமநாதன் 70 ஆண்டு காலம் கழகத்திற்காக உழைத்தவர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்களுக்கு அரும் பணியாற்றியவர். கழக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கோவைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர்.

கழகப் பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே என்ற அளவில் பம்பரமாகச் சுழன்று பாசத்துடன் பக்குவமாகத் தொண்டர்களை ஆதரித்து அரவணைத்துச் சென்றவர். கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு மிசா சிறைவாசம் என அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்று, சிறை ஏகியவர்.

இயக்கத்தின் அத்தனை அசைவுகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு தன் மேடைப் பேச்சுகளில் மடைதிறந்த வெள்ளமென அள்ளித் தெளிக்கும் அவருடைய ஆற்றல்மிகு உரைகளை கழகப் பொதுக்கூட்டங்களிலும், கழக மாநாடுகளிலும் கேட்டு அனைவரையும் போல நானும் வியந்து போயிருக்கிறேன்.

திராவிட இயக்கத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல- எனக்கும்- இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details