தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(15.11.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.
உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக விருதுகள் வழங்குதல், திருவுருவச் சிலைகள் அமைத்தல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை :உலகெங்கும் தமிழ் மொழியின் சிறப்பினைப் பரப்பிடும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட, கோரிக்கைக்கேற்ப நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு 3 இலட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோரிடம் வழங்கினார்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. விருது : இந்திய விடுதலைப் போரில் மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி எழுச்சி பெறச் செய்த பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் அவர்களின் பெயரில், அன்னாரின் 150ஆம் பிறந்த நாளினை முன்னிட்டு 3.9.2021 அன்று உருவாக்கப்பட்ட புதிய விருதினை முதன்முதலாக, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் வெட்டிக்காடு கிராமத்தில் கருநேசன் தொண்டைமான்-கமலம் இணையரின் மகனாக பிறந்து 33 ஆண்டுகளாகத் துறைமுகம் மற்றும் சரக்குப் பெட்டகத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திப் பெட்டக ஏற்றுமதி - இறக்குமதியை எளிதாக்கியதோடு, மும்பை, முந்தரா, சென்னை, காமராசர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி பல சாதனைகளைச் செய்தவருமான கப்பல் பொறியியல் தொழில்நுட்ப வித்தகர் எண்ணரசு கருநேசனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம், மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:“ஈபிஎஸ் செயல்திறன் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயார்” - ஜெயக்குமார்