பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி இன்று (ஆகஸ்ட் 7) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித்துறை அரசு ஆணையின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்களில் மூலம் மதிப்பெண்களுடன் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையத்தளங்களின் விவரம் பின்வருமாறு: www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.inமேலும், பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தரவுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால், வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அவர்கள் பயின்ற பள்ளியின் மூலமாக குறைதீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அரசுத் தேர்வுத் துறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதில், மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலம் முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிப்பு: அதிர்ச்சியில் மருத்துவ மாணவர்கள்!