இந்தியாவின் இறையாண்மை, நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்படுவதால் 2024ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் உறுப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, அந்த அரசாங்கத்தின் எம்.பி.க்கள் தமிழினியன், முகேஷ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
முதலில் பேசிய சரஸ்வதி, 'முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் போருக்கான காரணங்கள் இன்னும் முன் வைக்கப்படவில்லை. காரணங்களை வென்றெடுக்க முயல்கிறோம். ஜனநாயக ரீதியில் ஈழ மண்ணில் ஒரு அரசை நிறுவ வேண்டும் என முயற்சிக்கிறோம். தமிழர்களுக்கு அங்கு தனி நாடு அமைய வேண்டும் என்பதே நியாயமானதாகும். வன்முறை மீது நம்பிக்கை இல்லை' என்று தெரிவித்தார்.
இதன்பின்னர் தமிழ்தேச மக்கள் கட்சி தலைவர் புகழேந்தி பேசுகையில், '1994ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவில் புலிகள் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தடைக்கு எதிராக நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தீர்ப்பாயத்தில் வழக்கு நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டை ஈழத்தோடு இணைக்கும் சதித்திட்டம், மீண்டும் வன்முறையை தொடர உள்ளனர் என்கிற காரணத்தை வைத்தே தடையைத் தொடர்ந்து நீட்டிக்கின்றனர்.
தமிழ்தேச மக்கள் கட்சி தலைவர் புகழேந்தி தமிழர்கள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் இன அழிப்பிற்குப் பின் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மீது இலங்கை அரசால் வன்முறை ஏவப்படுகிறது' என ஆதங்கத்துடன் பேசினார்.