தமிழ்நாடு அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தெலுங்கானா (40% ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.3,016/-) புதுச்சேரி (40%ற்கு அதிகபட்சமாக ரூ.3,800/-) என அண்டை மாநிலங்களில் வழங்கப்படுகிறது. “தமிழ்நாட்டிலும் இதே அளவு உதவித்தொகை வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும்” என்பது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
ஏமாற்றமளித்த நிதிநிலை அறிக்கை
தமிழகத்தில் மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியாக “மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.1,000 ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்“ என அறிவித்திருந்தது. இந்த குறைந்தபட்ச அறிவிப்பையாவது நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிடும் என நம்பியிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கோபத்தை அளித்த மானியக் கோரிக்கை
செப்டம்பர் 1 ந் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நல மானியக்கோரிக்கை விவாதத்தின்போதாவது மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டுமென வலியுறுத்தி ஆகஸ்ட் 27 தமிழகம் முழுவதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் 500 மையங்களில் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சில அரசியல் கட்சிகளும் இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது.
தேர்தல் வாக்குறுதியைக்கூட நிறைவேற்றாததற்கு கண்டனம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிர்ச்சியும் கோபத்தையும் அளிக்கும் விதத்தில் உதவித்தொகை உயர்வு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மானியக்கோரிக்கை விவாதம் அமைந்துள்ளது. தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்த உயர்வைக்கூட வெளியிட்டு அமல்படுத்த தமிழக அரசு மறுப்பதற்கு லட்சணக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சார்பில் கண்டனங்களை பதிவு செய்கிறோம்.
நடப்பு கூட்டத்தொடருக்குள்ளாவது அறிவிக்கக் கோரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட இந்த வாழ்வாதாரக் கோரிக்கையில் 110 விதியையாவது பயன்படுத்தி, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடருக்குள்ளாவது குறைந்தபட்ச உதவித்தொகை உயர்வை அறிவிக்க முதலமைச்சரை வலியுறுத்திக் கோருகிறோம்.
அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை கடுமையான போராட்டங்களுக்கு தள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு” என குறிப்பிட்டுள்ளனர்.