கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அத்தியாவசியத்திற்காக டெல்லியிலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ராஜ்தானி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதில், தமிழ்நாட்டில் ஒரு ரயில்கூட இயக்கப்படவில்லை.
இதனால் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்னக ரயில்வேக்கு கடிதம் எழுதினார்.
அதனடிப்படையில் கோயம்புத்தூர்- மயிலாடுதுறை ஜனசதாப்தி சிறப்பு ரயில், மதுரை- விழுப்புரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில், திருச்சி நாகர்கோவில் இன்டர்சிட்டி சிறப்பு ரயில், கோயம்புத்தூர்- காட்பாடி இன்டர்சிட்டி ஆகிய நான்கு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே, ரயில்வே வாரியத்திடம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்டதும் விரைவில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருவாரூர் - காரைக்கால் மின்சார ரயில் சேவை ஆய்வு