தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவில்லாமல் தவிக்கும் தெரு விலங்குகள்... தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்த வேண்டுகோள்! - சென்னையில் கனமழை

சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தெரு ஓரங்களில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு மற்றும் உறைவிடம் அமைத்துத் தர தமிழ்நாடு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் கனமழை
சென்னையில் கனமழை

By

Published : Nov 10, 2021, 7:04 PM IST

சென்னை: பெரும்பாலான வீடுகளில் காவலுக்கு மட்டுமல்லாமல், உற்ற தோழனாகவும் இருப்பவை நாய்கள். இவை மட்டுமல்லாமல் பறவைகள், பூனைகள் உள்ளிட்டவைகளை செல்லப்பிராணிகளாக மக்கள் வளர்த்து வருகின்றனர்.

தற்போது இந்த கனமழை காரணமாக மனிதர்கள் உள்பட செல்லப்பிராணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. அதிலும் தெரு ஓரங்களில் சுற்றித்திரியும் விலங்குகளின் நிலைமை சொல்லில் அடங்காதவை.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் சர்வன் கிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் புயல், கனமழைப் பொழிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலத்தில் தெருவிலங்குள், வீட்டுவிலங்குகளைத் தனியார் தொண்டு நிறுவனங்கள் பாதுகாத்து அடைக்கலம் தந்தனர்.

படகுகள் மூலம் விலங்குகள் மீட்பு

தற்போது இந்த கனமழை நேரத்திலும் தனியார் தொண்டு அமைப்புகள் விலங்குகளைப் பாதுகாத்து வருகின்றனர். இதுநாள்வரை தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களில் விலங்குகளைப் பாதுகாப்பது எப்படி என்று தெரியாமல் உள்ளனர்.

மீட்புப் பணி

அரசு சார்பில் பேரிடர் காலங்களில் படகுகளில் மக்களை மீட்கும்போது தங்களுடன் இருக்கும் செல்லப்பிராணிகளை விட்டு வருமாறும், பின்னர் அந்த செல்லப்பிராணியை மீட்டுக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாக எங்கள் அமைப்பின் மூலம் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள தனியாக நான்கு படகுகள் வாங்கி வைத்துள்ளோம். ஏனெனில், செல்லப்பிராணியாக வளர்க்கும் விலங்குகளை விட்டுப் பிரிய நம் மனிதர்களுக்கு மனம் வரவில்லை.

கனமழையால் சூழ்ந்த வெள்ளம்

விலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை

தற்போது சென்னையில் எந்தெந்த பகுதியில் வெள்ளம் பாதிப்படைந்துள்ளது என்பதைக் கண்டறிந்து உள்ளோம்,

அதற்கேற்றாற்போல் நான்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து விலங்குகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். 2015ஆம் ஆண்டு வந்த பெரு வெள்ளம் போல் தற்போது இல்லை. சென்னையில் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் தயாராக உள்ளோம்.

பொதுமக்கள் தங்களுடைய வீட்டின் முன்புறத்தில் ஈரம் இல்லாத இடத்தை வீடற்ற விலங்குகளுக்கு அடைக்கலம் தர முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசு விலங்குகள் பாதுகாப்பிற்கு என்று தனி நிதி ஒதுக்க வேண்டும். தீயணைப்புத்துறை தனியார் தொண்டு நிறுவனங்களை இணைத்து மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலத்தில் மீட்பு நடவடிக்கையின்போது விலங்குகளின் பாதுகாப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவு, உறைவிடம் அமைத்துத் தர வேண்டும்

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விலங்குகள் நல ஆர்வலர் சங்கர், 'தமிழ்நாடு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியும், தங்குவதற்கு மாற்று இடம் வழங்கியும் வருகிறது.

இதேபோல குடிசைப்பகுதி, தெரு ஓரங்களில் வசிக்கும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை கனமழையில் இருந்து மீட்டு உணவு, உறைவிடம் அமைத்துத் தர வேண்டும்.

மழை தொடரும் காரணமாக பல்வேறு முன்னேற்பாடுகள், மீட்பு நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. பேரிடர் காலத்தில் மக்களை எவ்வாறு காப்பாற்ற நினைக்கிறதோ அரசு அதேபோன்று வாயில்லாத ஜீவன்களை மீட்கும் நடவடிக்கைகளில், தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே விலங்குகள் நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details