’கரோனா’ என்றதும் அதைத் தடுக்க உதவும் மருத்துவ பணியாளர்கள் தொடங்கி காவல்துறை, தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் மயான ஊழியர்கள் குறித்து சிந்தித்து பார்த்திருக்கிறோமா? சடலங்கள் மூலமாகவும் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால், கரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 பேர் உடலை அடக்கம் செய்த கைகளால், இப்போது 20-க்கும் மேற்பட்டோரை புதைக்கும் அவர்களுக்கு மனதளவில் மட்டுமில்லாமல் வேலையிலும் பளு அதிகரித்திருக்கும்தானே...அவர்களிடம் பேச முயற்சித்தோம்.
’இப்ப ஒரு அடக்கம் செய்யும்னுங்க...பிறகு பேசலாம்’ என தொலைபேசியை துண்டித்துவிட்டார் அந்த ஊழியர். சென்னையின் பழைமை வாய்ந்த சுடுகாடு ஒன்றில் பணிபுரியும் அந்நபரின் பதற்றம் நிறைந்த வார்த்தைகள் நம்மையும் சற்று துணுக்குறத்தான் செய்கிறது.
முகத்தைக்கூட பார்க்க முடியாதபடி மூடிச் சுருட்டப்பட்ட உடல்கள், தங்களுடைய அன்பானவர்களின் கடைசி ஸ்பரிசம் கூட கிடைக்காமல் எட்டி நின்று விம்மும் உறவினர்கள், எங்கோ உயிரிழந்த யாருக்கோ இங்கு இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது என அந்நியப்பட்ட கணங்களை சுமந்து நிற்கிறது, அந்த சுடுகாடு.
மீண்டும் அழைப்பு வருகிறது, அதே நபர்தான். ’என் பெயரைக் குறிப்பிட வேண்டாமே’ எனக் கூறிவிட்டு கரோனாவின் கருப்பு பக்கங்களை நமக்கு காட்சிப்படுத்துகிறார்.
”என் சர்வீசில் எத்தனையோ உயிரிழப்புகளைக் கண்டிருக்கிறேன். பல குழிகளைத் தோண்டி என் கைகளாலேயே அவ்வுடல்களைப் புதைத்திருக்கிறேன். பெரிதாக என்னுள் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. ஆனால் இன்று அப்படியல்ல... தொடர்ச்சியாக கரோனாவுக்கு பலியாகியவர்களின் சடலங்களும், அதைக் கொண்டு வரும் வாகனங்களில் எங்களுக்கான பாதுகாப்பு உடைகளும் அனுப்பிவைக்கப்படுகின்றன.