குழந்தைகளை படம் எடுப்பதும், பறவைகளை படம் எடுப்பதும் சவால் நிறைந்த கலை. அதற்கு நாம் குழந்தையாக மாற வேண்டும். குழந்தைகளைக் கூட எப்படியாவது படம் எடுத்து விட முடியும். ஆனால் பறவைகளைப் படமெடுக்கக் எல்லையில்லா பொறுமை வேண்டும்.
அப்படியான பொறுமை கைவரப் பெற்றதால் ராதிகா ராமசாமி, இந்திய காட்டுயிர் ஒளிப்படத் துறையில் சாதித்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
ராதிகா எடுத்த பறவைகளின் ஒளிப்படங்கள் தனித்துவமானவை, பறவைகளின் அரிதான தருணங்கள், இறையை பிடித்தவை ,சண்டைபோடுபவை, கூடு கட்டுவது என பல புகைப்படங்களை எடுத்துள்ளார். அதுவே ராதிகாவிற்கு 'ஆக்சன் போட்டோகிராபர்' என்ற செல்லப்பெயரை ஒளிப்படக் கலைஞர்களிடமிருந்து பெற்றுத் தந்துள்ளது.
ராதிகா ராமசாமி தற்போது பல்வேறு இடங்களுக்கு சென்று வனவிலங்குகளை படம் எடுப்பது ,புகைப்படப் பயிற்சி வகுப்புகள்,செமினார்கள் ,பயிற்சிப் பட்டறைகள் என பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி தெரிந்துகொண்டேயாக வேண்டும் என்று அவரின் பிஸி ஷெட்யூலுக்கு மத்தியில் தொடர்ப்பு கொண்டு கேட்ட பொழுது மறுக்காமல் பேட்டியளிக்க சம்மதித்தார் .
இந்த வருடம் தமிழ்நாடு பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் என்னைப் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது என்று பெருமிதம் பொங்க விவரித்தார் ராதிகா ராமசாமி. ஈ டிவி பாரத் செய்திக்காக அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது,
ராதிகா ராமசாமி எப்படி வனஉயிர் புகைப்படக் கலைஞர் ஆனார்?
டெல்லியில் இருந்து தற்போதுதான் சென்னைக்குக் குடிபெயர்ந்து உள்ளோம் .என் சொந்த ஊர் தேனி மாவட்டம் ,வெங்கடாசலபுரம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆர்வமாக ஆரம்பித்த கேமரா மீதான காதல் தற்போது என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
குடும்பத்துடன் வெவ்வேறு ஊர்களுக்கு சுற்றுலா செல்லும்போது அழகான பூக்கள் ,செடிகள்,விலங்குகள் என எல்லாவற்றையும் புகைப்படம் மூலம் பதிவு செய்ய அப்பாவிடம் கேமரா கேட்டேன்.
அவர் எனக்காக ஒரு கேமரா வாங்கிக் குடுத்தார். அப்போது ஆரம்பித்த எனது கேமராவுடனான பயணம் தற்போது வரை நீடிக்கின்றது. டிஜிட்டல் கேமரா வந்த சமயம், நான் டெல்லியில் இருந்தேன். அப்போது பக்கத்தில் உள்ள வரலாற்று இடங்களை புதிது புதிதாக படங்கள் எடுக்கவும் ,டிஜிட்டல் கேமராவில் உடனடியாக எடுத்த படங்களை பார்ப்பதும் என் ஆர்வத்தை மேலும் தூண்டியது. பறவைகள்,விலங்குகள் புகைப்படம் எடுப்பதில் என் ஆர்வம் நீண்டுகொண்டே சென்றது.
தங்களைப் பற்றிய குறிப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது பற்றி?