வெளியூரில் பணிபுரியும் பெண்களுக்கு, தமிழக அரசின் 'தோழி விடுதி'; என்ன அம்சங்கள் உள்ளது? வாங்க பார்க்கலாம்.. சென்னை:"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்" என்ற பாரதியின் வரிகளை நிஜம் கூறும் காலத்தை அனுபவித்து வருகிறது நம் தலைமுறை. பெண் கல்வி, பெண்ணுரிமை என்று வாய் வார்த்தை மட்டுமில்லாமல் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகிறது.
பெண் பேசுவார்களா என்று எண்ணும் போது, படிப்பேன் என்று முன்வந்தார்கள், படிப்பார்களா என்று எண்ணும் போது குடும்பப் பொறுப்பைச் சுமப்பேன் என்றார்கள், பொறுப்பைச் சுமப்பார்களா என்று எண்ணும் போது உரிமை காக்கப் போராடுவேன் என்று முன்வருவதற்குக் காரணமாக அமைந்தது பெண்கள் கையில் எடுத்த புத்தகங்கள்.
இப்படி பெண்ணின் ஊக்கத்திற்கும் உரிமைக்கும் உந்து கோலாகவும் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் பெண்களுக்கான இலவசப் பேருந்து, மகளிர் உரிமைத் தொகை என்ற வரிசையில் தமிழ்நாடு அரசின் முதன்மை மற்றும் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் தோழி திட்டம். இந்தத் திட்டம் முழுக்க முழுக்க மாணவிகள் மற்றும் வேலை பார்க்கும் பெண்களுக்கென தனிச்சிறப்பு பெற்ற திட்டமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களிலிருந்து சென்னையில் பணி புரியும் பெண்களுக்குக் குறைந்த வாடகையில் தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் என்பது தமிழ்நாட்டின் முக்கியத் தேவைகளில் ஒன்றாக ஒன்றாகவே உள்ளது. அதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்டந்தோறும் தோழி மகளிர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
எங்கெங்கு அமைகிறது 'தோழி'?: அந்த வகையில் தற்போது திருச்சி, வேலூர், செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட வேலை மையம் நிறைந்த பகுதிகளில் 'தோழி' என்ற பெயரில் அரசு சார்பில் மகளிர் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனி பகுதியில் 18 கோடி ரூபாய் செலவில் சுமார் 66ஆயிரத்து 836 சதுர அடியில் 461 படுகை வசதிகளுடன் கூடிய மூன்றடுக்கு மாடி கொண்ட தோழி மகளிர் விடுதி கட்டடம் கட்டப்பட்டு அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மற்ற விடுதிகளில் இருந்து மாறுபடும் 'தோழி': சென்னையிலுள்ள மற்ற பெண்கள் விடுதிகளில் இருந்து தோழி விடுதி மாறுபடுவதற்கான காரணம் அதன் சிறப்பம்சங்களே என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரப் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோமெட்ரிக் வசதி, இலவச வைஃபை(wi-fi) உட்படப் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதனால் சென்னையில் தங்கி பணிபுரியும் பெண்களுக்கு இது ஒரு பாதுகாப்புடைய இடமாகத் திகழ்வதாகப் பெண்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அரசு இந்த தோழி மகளிர் விடுதியில் யாரெல்லாம் சேரலாம், சேருவதற்கான வழிமுறைகள் என்ன, அங்குள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து, தாம்பரம் தோழி மகளிர் விடுதி காப்பாளர் சிவசக்தி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது, "தாம்பரம் சானடோரியத்தில் 18 கோடி மதிப்பீட்டில் தோழி மகளிர் விடுதி கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தோழியின் பிரத்தியேக அம்சங்கள்:இது மகளிருக்கு மிகவும் பாதுகாப்பான விடுதியாக உள்ளது. அதேபோல் இந்த விடுதியில் பயோமெட்ரிக் சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பதிவு இருந்தால் மட்டுமே உள்ளே வர முடியும் வெளியே செல்ல முடியும். அதேபோல் இந்த தோழி மகளிர் விடுதியில் டிவி, 24 மணி நேர இன்டர்நெட் வசதி, வாஷிங் மெஷின், அயன்பாக்ஸ், மைக்ரோ வேவ், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பார்க்கிங் வசதி, விடுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், சுத்தமான கழிவறைகள் இவை அனைத்தையும் பாதுகாக்கப் பெண் காவலாளிகள் என தரம் கூட்டப்பட்ட முறையில் நிறுவப்பட்டுள்ளது. உள்ளனர்.
தாம்பரம் தோழி மகளிர் விடுதியில் மொத்தம் 150 அறைகளும் 461 படுகைகளும் அமைக்கப்பட்டு தாராளமான இடங்களைக் கொண்டு அமைந்துள்ளது. மேலும் குழந்தைகளுடன் தங்குபவர்களுக்கு எனத் தனி அறைகளும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளி பெண்களுக்கான பிரத்தியேக அறைகளும், கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கரம் நீட்டுகிறது 'தோழி': இந்த தோழி மகளிர் விடுதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே தங்க முடியும். சென்னையில் தங்கிப் பணிபுரிபவர்களோ அல்லது படிப்பவர்களோ தங்களது பணிக்கான அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஐடி ஆதாரங்களைக் கொடுத்து இங்குச் சேர்ந்து கொள்ளலாம். மற்ற தனியார் விடுதிகளைக் காட்டிலும் அரசு தோழி மகளிர் விடுதியில் தாராளமாக இட வசதிகளும், சுத்தமான அறைகளும், படிப்பதற்கான தனியான அறைகள், ஓய்வு எடுப்பதற்குத் தனியான அறைகள் என அனைத்து வசதிகளும் இங்குச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாடகை எடுத்துத் தங்கும் இடத்தில் கட்டணங்களும் அதிகம். அது மட்டும் இல்லாமல் மின்சாரத்திற்குத் தனியாகக் கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் இங்கு மின்சாரத்திற்குக் கட்டணம் எல்லாம் வசூலிப்பதில்லை. இங்குத் தங்கும் மகளிர்கள் அரசு தோழி விடுதி உயர்தரமாக உள்ளது என தங்களிடம் தெரிவிக்கின்றனர்.
- ஏசி வசதி இல்லாமல் நான்கு படுக்கைகள் கொண்ட அரை மாதம் ரூபாய் 5ஆயிரத்து 500ரூபாயும்
- ஏசி வசதி இல்லாமல் இரண்டு படுக்கை கொண்ட அறை (அட்டாச்சிங் பாத்ரூம் கொண்டவை) மாதம் 7ஆயிரத்து 800ரூபாயும்
- ஏசி வசதியுடன் இரண்டு படுகைகள் கொண்ட அறை மாதம் 10ஆயிரத்து 620 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இங்குத் தங்கும் பெண்கள் விடுதியில் உள்ளதுபோல் இல்லாமல் அவர்களது இன்னொரு வீடாக நினைத்துத் தங்கிக் கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களால் இரவு 9 மணிக்குள் அனைவரும் விடுதிக்கு வந்து விட வேண்டும். மற்றபடி பணிக்குச் செல்பவர்கள் அவர்களின் வேலை நேரத்தின்படி வந்துவிட வேண்டும். பெண்கள் வெளியில் தங்கி வேலை செய்ய வேண்டும் என்றாலே அனைவரும் அவர்களது பாதுகாப்பைத் தான் முதலில் பார்ப்பார்கள். அரசின் இந்த தோழி மகளிர் விடுதி 100% பாதுகாப்பானது. அதனால் வெளியூரில் இருந்து தங்கி பணிபுரியும் பெண்களுக்கான நல்வாய்ப்பாக அரசின் தோழி மகளிர் விடுதி அமைந்துள்ளது" எனக் கூறினார்.
தோழி குறித்துக் கூறும் பயனாளி:தொடர்ந்து விடுதியில் தங்கியுள்ள இலக்ஷனா கூறுகையில், "சென்னை அரசு இசைக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, யாழ் இசை அகாடமியில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறேன். இதனால் சென்னையில் தங்குவதற்கு விடுதிகள் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் 'தோழி மகளிர் விடுதி' பற்றி அறிந்தேன். பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தோழி விடுதியில் பார்த்த போது, தாராளமாகவும், சுத்தமான இடமாகவும் இருந்ததையடுத்து தோழி விடுதியைத் தேர்வு செய்தேன்.
தனியார் விடுதிகளைப் பொறுத்தவரையில், இறுக்கமான அறைகளாக இருக்கும். ஆனால் தோழி மகளிர் விடுதியில் மிகவும் தாராளமாக இடவசதிகளுடன் அறைகள் உள்ளது. மேலும் மற்ற மகளிர் விடுதியை விட அரசின் தோழி மகளிர் விடுதியில் கட்டணமும் பட்ஜெட் ஃப்ரெண்டிலியாக இருந்தது. தனியாக வீடு வாடகை எடுத்துத் தங்குவதை விட இங்கு எல்லாவித பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. பயோமெட்ரிக் வசதி உள்ளதால் யாரும் தங்கள் அறையைத் திறக்கவும் முடியாது.
மேலும், இங்குக் குறைந்த கட்டணத்தில் தரமான உணவுகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல், 24 மணி நேர இன்டர்நெட் வசதி, துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. உண்மையில் தோழி மகளிர் விடுதி மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் அரசு அமைத்துள்ள தோழி மகளிர் விடுதி பற்றி இன்னும் பலரின் பார்வைக்கு எட்டவில்லை. இது ஒருபுறம் இருக்கத் தாம்பரம் மகளிர் விடுதி அமைந்திருக்கும் சரியான முகவரி இன்னும் பலர் மத்தியில் முழு விவரமாகக் கிடைக்கவில்லை. இத்தகைய வசதிகள் நிறைந்த அரசின் மகளிர் விடுதி இருக்கும் இடங்கள் குறித்துத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அதிகப்படியானோர் வர வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மெஹபூபா முக்தி சென்ற கார் விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!