தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2021, 1:43 PM IST

ETV Bharat / state

புகார் அளிக்காமலிருக்க பெண் எஸ்பியின் காலில் விழுவதாக கூறிய டிஜிபி

தன்மீது பாலியல் புகார் அளிக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட பெண் எஸ்பியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளதாக சிறப்பு டிஜிபி கூறியதாக, அவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

special DGP said to women sp to fell down for apologies and request to not given compliant
special DGP said to women sp to fell down for apologies and request to not given compliant

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி கடந்த 21ஆம் தேதி முதலமைச்சரின் கரூர் பயண நிகழ்ச்சிகளை மேற்பார்வையிட்டார். அப்போது, உடன் பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் எஸ்பி சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடம் புகாரளித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானது.

பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் தானக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது, சிபிசிஐடி தொடர்ந்து இந்ச வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் சிபிசிஐடி விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும். இந்த வழக்கு தொடர்பான அறிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில், கரூரில் முதலமைச்சர் பரப்புரை பயணத்தின் போது கடந்த 21ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது பல உயர் அலுவலர்கள் இருக்கும் இடத்தில், முதலமைச்சர் அடுத்தகட்டமாக பரப்புரை செய்யும் இடத்திற்கு சிறப்பு டிஜிபி என்னை தன்னுடன் வருமாறு அழைத்தார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் அடுத்தகட்டமாக பரப்புரை மேற்கொள்ளும் பகுதிக்கு இரவு 7.40 மணியளவில் சென்றடைந்தோம். பின்னர், டிஜிபியுடன் அவரது வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்றேன். அப்போது, அவர் சாப்பிட சில திண்பண்டங்களையும், சௌகரியமாக அமர்ந்துகொள்ள தலையணையும் அளித்தார்.

பயணத்தின் போது, ஏதேனும் பாடல்களைப் பாடுமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டதால் பாடல் ஒன்றினைப் பாடினேன். அதற்காக வாழ்த்துவது போல் என் இரு கைகளையும் பற்றிக்கொண்டார். பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பாடல்களை பாடினேன். விருப்பமான பாடல்கள் என்ன என்பதை என்னிடம் கேட்டு அவற்றை யூடியூபில் ஒளிபரப்பினார். தொடர்ந்து அவர் தவறாக நடந்துகொள்வது போல் தோன்றவே கையை விடுமாறு வற்புறுத்தினேன்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது என்னை அவர் எடுத்த புகைப்படங்களை காட்டி, தவறாக நடக்க முற்பட்டார். இவரது இந்தச் செயல் உளுந்தூர்பேட்டையை நெருங்கும்வரை தொடர்ந்தது. பின்னர், அங்கு உயர் அலுவலர்கள் இருந்த காரணத்தினால் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். மேலும், தொடர்ந்து அவரது காரிலேயே அலுவலகத்திற்கு வருமாறு வற்புறுத்தினார். ஆனால், அவருடன் செல்ல மறுத்து வேறு வாகனத்தில் அலுவலகம் சென்றேன்.

இதனையடுத்து மறுநாள் 22ஆம் தேதி தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறப்பு டிஜிபி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிக்க முடிவெடுத்து சென்றேன். இதுகுறித்து ஐஜி ஜெயராமனிடம் பேசிய டிஜிபி, என்னிடம் பேச வேண்டும் என தொடர்ந்து போன் மூலமாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் வற்புறுத்தினார்.

அதன்பின் கள்ளக்குறிச்சி எஸ்பி ஜீயாஉல்ஹக், திருப்பூர் எஸ்பி திஷா மிட்டல், கடலூர் எஸ்பி அபினவ் ஆகியோரிடம் நான் சண்டையிட்டு செல்வதாகக் கூறி தடுத்து நிறுத்துமாறு கூறியுள்ளார். அவர் கூறியதற்கு இணங்க மூன்று எஸ்பிக்களும் எனக்கு மாறி மாறி போன் செய்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியை நெருங்கும் போது மாவட்ட எஸ்பி, ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் 15 காவலர்கள் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

எனது பாதுகாவலரையும் ஓட்டுநரையும் மிரட்டி வாகனத்திலிருந்து கீழே இறங்குமாறு கூறி, எனது காரின் சாவியை பறித்தனர். அதுமட்டுமின்றி, சிறப்பு டிஜிபி செல்போன் அழைப்பில் இருக்கிறார். நான் அவரிடம் கட்டாயம் பேச வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தியதால் பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபியிடம் பேசினேன். அப்போது அவர், நான் செய்த காரியத்திற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். என்மீது புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், நான் எதுவாயினும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி இடம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியதற்கு, நான் உனது நண்பன் என அவர் கூறினார். நாம் எப்போதும் நண்பர்கள் இல்லை. நான் எஸ்பி மற்றும் நீங்கள் ஒரு சிறப்பு டிஜிபி என்று கூறினேன். ஆனால் அவர் நீ இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

நான் உங்களிடம் பேச விரும்பவில்லை எனக் கூறியதையடுத்து, சில எஸ்பிக்களிடம் பேச வற்புறுத்தினர். பின்னர், திருப்பூர் எஸ்பி திஷா மிட்டலிடம் பேசுவதாக ஒப்புக்கொண்டதையடுத்து, எனது வாகனத்தை செல்ல அனுமதித்தனர். இத்தனை தடங்கல்களுக்கு மத்தியிலே உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி திரிபாதியை சந்தித்து புகார் அளித்தேன். இந்த புகார் குறித்து அவர்கள் தகுந்த நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்தனர்.

புகாரளித்ததைத் தொடர்ந்து அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தபோது எனது கணவர் போன் செய்தார். அப்போது, அவரது தந்தையிடம் சிலர் டிஜிபி விவகாரம் தொடர்பாக பேசி மிரட்டியதாகத் தெரிவித்தார். அதுகுறித்து, டிஜிபி மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார். ஆனால் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் அறியாத அவர் போனை துண்டித்துள்ளார்.

சிறப்பு டிஜிபி தனது உயர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக நடந்து கொண்டதுடன், அதுகுறித்து புகாரளிக்கச் சென்றபோது தடுத்து நிறுத்தினார். இந்த விவகாரத்திற்காக பல மாவட்ட எஸ்பிக்களை வைத்து பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் எனது உறவினர்கள் மூலம் கொடுத்த புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்துள்ளார். டிஜிபி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்கில் ஆதாரங்களை மாற்றவும் முயல்வார் எனவே உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்த டிஜிபி மீதும் அதை தடுக்க உதவிய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பெண் எஸ்பி, தான் பாதிக்கப்பட்ட விதம் குறித்து புகாரில் தெரிவித்ததை முதல் தகவல் அறிக்கையில் முழுவதுமாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த முதல் தகவல் அறிக்கை வெளியானதன் மூலம் டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் மட்டுமல்லாது, மேலும் 3 எஸ்பிக்கள், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 15 காவலர்கள் புகார் அளிக்க வந்த பெண் எஸ்பியை தடுக்க முயன்றது அம்பலமாகியுள்ளது. சிபிசிஐடியின் அடுத்த கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு டிஜிபி கட்டாய காத்திருப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புகார் அளிக்க வந்த பெண் எஸ்பியை தடுத்த மாவட்ட எஸ்பி, சம்பந்தப்பட்ட மற்ற காவல்துறை அலுவலர்களும் துறை ரீதியான நடவடிக்கையை சந்திக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details