சென்னை: நாடு முழுவதும் நாளை (நவ.11) தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவதற்காக பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகரித்தே உள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு போக்குவரத்து துறை சார்பாக சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தலைநகரிலிருந்து செல்லவும், 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.
குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொருத்தவரையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில், குறைதீர் அறைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ளே நுழைந்தவுடனே, எந்தெந்த மாவட்டத்திற்கு பேருந்துகள் எந்த நடைமேடையில் உள்ளது என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து குறித்து பயணிகளுக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் முன்பதிவு செய்து பேருந்து எங்கு நிற்கிறது என்ற தகவலை வழங்குவதற்காகவும் சிறப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.