மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமிக்கு நன்றி தெரிவித்த வைகோ சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி மதிமுக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். மேலும், மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுத்ததை திருப்பூர் துரைசாமி ஆதரிக்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த துரைசாமி, வைகோ மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். குறிப்பாக, “வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ, தற்போது வாரிசை வைத்து அரசியல் செய்கிறார்” என துரைசாமி விமர்சனம் செய்தார். இதனால், மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என பலமுறை வைகோவிற்கு துரைசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில், திருப்பூர் துரைசாமி மதிமுகவில் இருந்து நேற்று (மே 30) விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, “கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கட்டாயப்படுத்தி சொன்னவர்தான் திருப்பூர் துரைசாமி. திராவிட முன்னேற்றக் கழகம் உடனான கூட்டணி வெற்றி பெறாது, எனவே அதில் நாம் இணையக் கூடாது என அவர் எங்களை வலியுறுத்தினார்.
ஆனால் அவரது கருத்தை ஏற்காமல் நாங்கள் கூட்டணி வைத்தோம். ஆனால் அன்றைக்கு அவர் சொன்ன கருத்தை, இன்றைக்கு அவர் அப்படியே மாற்றிச் சொல்லி உள்ளார். துரை வைகோ மதிமுகவில் பொறுப்புக்கு வரக் கூடாது என்று நான் வலியுறுத்தி சொன்னேன். ஆனால், எங்களுடைய கழக நிர்வாகிகள் அவரை எனக்கு தெரியாமலேயே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று அவரை தயார்படுத்தி வைத்திருந்தனர்.
மேலும், அவர் கட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர். எனவேதான் கழக நிர்வாகிகள் மத்தியில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினோம். அதில், 106 பேர் பங்கேற்றனர். துரை வைகோவுக்கு ஆதரவாக 104 பேர் வாக்களித்து உள்ளனர். 2 பேர் மட்டும் துரை வைகோ வர வேண்டாம் என்று வாக்களித்து இருந்தனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் துரைசாமி கட்சிக்குள் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர் அவருடன் சேர்ந்து கொண்டனர். கட்சியின் அனைத்து செலவுகளையும் முறையாக மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறையிடம் பதிவு செய்து வருகிறோம். அதனை பொதுக் குழுவிலும் தாக்கல் செய்து உள்ளோம். கட்சியின் வரவு செலவில், என்னுடைய நாணயத்தை யாரும் குறை சொல்ல முடியாது.
கட்சியின் விதிப்படி பொதுச் செயலாளரும் காசோலையில் கையெழுத்திடலாம் என்று உள்ளது. அந்த வகையில்தான் பொருளாளர் இல்லாத சூழலில் நான் காசோலையில் கையெழுத்திட்டேன். இன்றைக்கு கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்து உள்ளார். இத்தனை ஆண்டுகளாக என்னுடன் பயணித்ததற்கு அவருக்கு மனமார்ந்த நன்றி. ஆனால் அவர் கூறும் எந்த குற்றச்சாட்டுகளிலும் உண்மை இல்லை.
நான் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கட்சி ஆரம்பிக்கவில்லை. திமுகவிலிருந்து என்னை விலக்கிய பின்னர்தான் கட்சி தொடங்கினேன்” என கூறினார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்தப் போவதாக பிரதமர் மோடி சொல்லி இருப்பது, நாட்டுக்கே ஆபத்தாக அமையும். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கத்தான் வழிவகுக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் தனித்துறையாக உருவானது' - அமைச்சர் எ.வ.வேலு!