சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடங்கியது முதல் பல்வேறு மாறுதல்கள் நடைபெற்றன. ஓ.பி.எஸ்க்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவது, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பவர்களுக்குக் கட்சியில் உயர் பொறுப்புகள் வழங்குவது என நீண்டு கொண்டே இருக்கிறது இந்த பட்டியல்.
இதில், ஒருபகுதியாக தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் மேலும் ஓ.பி.எஸ் இருக்கையை மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர், "யார் எங்கு அமர வேண்டும், இருக்கை எங்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை அதில் யாரும் தலையிட முடியாது" என்று கூறினார். இதனை அடுத்து எடப்பாடி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப் பேரவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் என்ன செய்ய முடியும்: பேரவைத் தலைவர் தான் உறுப்பினர்களுக்கு இருக்கைகளை ஒதுக்குவார் பேரவைத் தலைவர் வகுக்கும் வரிசை முறைப்படி உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும் இது சட்டப் பேரவையின் விதிகளுக்கு உட்பட்டது.
மேலும் இருக்கை விவகாரம் என்பது சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு மாற்றம் செய்வதற்கான உரிமை சபாநாயகருக்கு உண்டு என சட்டப்பேரவை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவியில் இருந்து நீக்கச் சொல்வதற்கோ அல்லது இருக்கையை மாற்றச் சொல்லி வற்புறுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி செய்யும் பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகருக்கு உரிமை உள்ளது.
சபாநாயகர் என்ன செய்ய முடியாது: நடந்து முடிந்த பேரவை கூட்டத்தில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவைச் சேர்ந்த பல சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டுமெனக் கோஷமிட்டனர்.
இதனை அடுத்து பேரவைக்குள் கூச்சலிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் இருக்கை விவகாரம் தொடர்பாகப் பேரவைத் தலைவர் பதிலளித்தார். இருக்கை விவகாரத்தில் நான்தான் முடிவெடுக்க வேண்டும் அது என்னுடைய தனிப்பட்ட முடிவெனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் சபாநாயகர் அப்படிச் செயல்பட முடியாது. பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவரது இருக்கையை மாற்ற வேண்டுமெனப் பேரவைத் தலைவர் முடிவெடுத்தால் இருக்கையை மாற்றுவதற்கான அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உண்டு. மாறாக என்னுடைய தனிப்பட்ட முடிவில் யாரும் தலையிடக் கூடாது என அவர் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
இருக்கை விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து: "சட்டப் பேரவைக்குள் நடக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது அப்படித் தலையிடுவது பேரவை மரபும் அல்ல. சட்டப் பேரவைக்கென பேரவை விதிமுறைகளும் உள்ளது அதற்கு உட்பட்டுப் பேரவைத் தலைவர் ஓ.பி.எஸ் இருக்கையை மாற்றித் தர வேண்டும் என எடப்பாடி தரப்பினர் அழுத்தம் கொடுக்கலாம். அதைவிட்டு, கோஷங்கள் எழுப்புவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது எல்லாம் வீண் செயல்" என குறிப்பிட்டார்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து: "இந்த இருக்கை விவகாரத்தில் வேண்டுமென்றேதான் எந்த ஒரு முடிவையும் பேரவைத் தலைவர் எடுக்காமல் உள்ளார். உட்கட்சி பூசல் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் இப்படிச் செயல்படுகிறார். குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு பிளவுபட்ட கட்சி என்பதை நிரூபிக்கவே பேரவைத் தலைவர் இப்படிச் செயல்படுகிறார். அதிமுக கட்சிக்குள் மட்டுமல்ல சட்டப் பேரவையிலும் அவர்கள் பிளவுபட்ட கட்சிதான் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே அவர் முயல்கிறார். இதைத் தான் தி.மு.க விரும்புகிறது அந்த விருப்பத்திற்கேற்ப தான் பேரவைத் தலைவர் செயல்படுவார்" என்று கூறினார்.
இதையும் படிங்க:இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!