சென்னை ஆலந்தூரில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். நிவர் புயல் காரணமாக மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை உள்பட புறநகர் பகுதிகள் மழைநீரில் மிதந்தன. அதேபோல் ஆலந்தூர் மண்டல கண்ணன் காலனி முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் கண்ணன் காலனியில் சூழ்ந்த மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நேற்று (நவம்பர் 27) இரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அமைச்சருடன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், வட்டார துணை ஆணையர் ஆல்பின்ராஜ், கண்காணிப்பாளர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் பழனிசாமி, நிவர் புயல் கரையை கடப்பதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை வைத்து விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதன் மூலம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புயல் பாதித்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு அமைக்கப்பட்ட 1400 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் தற்போது பெய்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வசதியாக இருக்கிறது. தற்போது பெய்த மழையினால் சென்னையில் 58 இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், 8 இடங்களில் மழைநீர் நீக்கப்பட்டது. மீதமுள்ள 40 இடங்களில் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்காமல் பராமரிக்கப்படுகின்றன.
அமைச்சர் வேலுமணி பேசிய காணொலி சென்னை மட்டுமின்றி புயல் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்ட செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக அகற்றப்படும். முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவார்” என்றார்.