சென்னை: முன்பதிவு செய்யாத பயணிகள் அனுமதிக்கப்பட்டால்தான் புறநகர் ரயில் சேவையை இயக்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் சரக்கு ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சரக்கு ரயில் சேவை மற்றும் பார்சல்கள் முன் பதிவு செய்ய பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு, மீன், பால், விவசாயப் பொருட்கள் ஆகியவற்றை ரயிலில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உரம், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் எஃக்கு ஆகியவற்றுக்கு தேவையான மூலப் பொருட்கள், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக அளவில் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக அளவில் மோட்டார் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.