உயர் அழுத்த மின்சாரத்துக்கு குறைந்தபட்ச கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் - Southern railway
சென்னை: கரோனா ஊரடங்கு முடியும் வரை தெற்கு ரயில்வே பயன்படுத்தும் உயர் அழுத்த மின்சாரத்துக்கு குறைந்தபட்ச கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டதால், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்குப் போதிய வருவாய் இல்லை. அதனால், திருச்சி மின் கோட்டத்துக்குட்பட்ட திருச்சி, அரியலூர், விருத்தாசலம், கடலூர், விழுப்புரம், தண்டரை, ஆரணி சாலை, தஞ்சாவூர் ஆகிய 8 மின்பகிர்மான நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்சாரப் பயன்பாட்டுக்கு குறைந்தபட்ச மின் கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என, தெற்கு ரயில்வே சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், அதிகபட்ச கட்டணம், அபராதம் தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கெனவே தொழில் நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கூடுதல் மின் கட்டணம் மற்றும் அபராதம் செலுத்தக்கோரி டான்ஜெட்கோவுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததைச் சுட்டிக்காட்டி, கரோனா ஊரடங்கு முடியும் வரை குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதலாக கட்டணம் வசூலித்து இருந்தால் அதை வரும் மாதங்களுக்கான மின் கட்டணத்தில் சரிசெய்து கொள்ள வேண்டும் என மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டார்.