தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முக்கிய திட்டங்கள் என்ன?

மார்ச் 27-ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 15, 2023, 7:06 AM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடைந்துள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் சென்னை விமான நிலையத்தில் மேலும் பல உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ளது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முனையத்தில் பேஸ்மெண்ட் என்ற கீழ் தளத்தில் பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக பயணியருக்கான வழக்கான நடைமுறைகள் கையாளப்படும். இரண்டாவது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மற்ற தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள் மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் ஐந்து தளங்களுடன் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய விமான முனையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, கருவிகள், உபகரணங்களின் சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தப் புதிய முனையத்தில், பேஸ்மெண்ட் கீழ்தளத்தில், விமான பயணிகள் லக்கேஜ்கள் உடைமைகள் கையாளப்படும் பணிகள், கடந்த 10 ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.

அதேபோல் புதிய முனையத்தில் அமைக்கப்பட்ட மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் போன்றவைகளை கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி விமான போக்குவரத்து துறை அமைச்சர் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில் இந்த புதிய முனையத்தினை ஒட்டு மொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 27 ஆம் தேதி திங்கள் கிழமை சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். அதன் பின்பு ஹெலிகாப்டரில் மதுரை வந்து மதுரையில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். சென்னை விமான நிலையத்தில் நடக்கும் சிறப்பான விழாவில் இந்த புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொள்ள இருப்பதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும் பிரதமர் சென்னை வருகை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டு துரிதமாக பணிகள் நடந்து வருகின்றன.

இதையும் படிங்க: சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.. துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..

ABOUT THE AUTHOR

...view details