சென்னை: சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ஒருங்கிணைந்த விமான நிலையம் ரூ.2400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இப்பணிகள், ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என்று இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்தனர். ஃபேஸ் 1-ல், ரூ.1260 கோடியில் 1.26 லட்சம் சதுர மீட்டரில், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விமான முனையம் கட்டும் பணி கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வந்தது.
ஆனால் 3 ஆண்டுகளில் முடிய வேண்டிய இந்த பணி, கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, தாமதமாக நடந்துவந்தது. இந்த நிலையில் சென்னை சர்வதேச புதிய முனையம் அடங்கிய ஃபேஸ் 1 பணிகள் நிறைவடைந்து, கடந்த 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்து புதிய விமான முனையத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்த புதிய முனையத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு முனையத்தில் குடியுரிமை சோதனைக்கு 22 கவுன்டர்களும், வருகை பகுதியில் 34 கவுன்டர்களும் என மொத்தம் 54 கவுன்டர்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்த புதிய அதிநவீன முனையத்தில், வருகை பகுதியில் 54 கவுன்டர்களும், புறப்பாடு பகுதியில் 54 கவுன்டர்களும் மொத்தம் 108 குடியுரிமை கவுன்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக, ஏற்கனவே 34 கவுன்டர்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இந்த புதிய முனையத்தில் 80 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச முனையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம், இனிமேல் இருக்காது. அது தவிர இட நெருக்கடிகள் இல்லாமல் விசாலமான இடங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் போது அதிநவீன சாய்வு தளத்துடன் கூடிய இருக்கைகள் என ஏராளமான புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்களை கவரும் விதத்தில் அதிநவீன வண்ணங்களுடன் கூடிய ஓவியங்கள், ஒளிரும் விளக்குகள், இயற்கையாக சூரிய ஒளி விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் வருவது போன்ற அமைப்புகளுடன், நட்சத்திர ஹோட்டல்கள் போல் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளும் ஜொலிக்கின்றன.
மேலும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிப்பதற்காக "இன் லைன் பேக்கேஜ் சிஸ்டம்" என்ற 3 அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் பயணிகளின் உடைமைகளை வேகமாக பரிசோதித்து விமானங்களுக்கு அனுப்பும் தன்மையுடையது. அதோடு இந்த பரிசோதனையின் போது பயணிகள், அவர்களின் லக்கேஜ்கள் கூட வரவேண்டிய அவசியம் இல்லை.