சென்னை:பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே அதிமுகவில் இணைந்தார் என்ற அறிவிப்பு வந்தது. அதிமுகவில் இணைந்த பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிர்மல்குமார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொந்த கட்சியினரையே வேவு பார்க்கும் குணம் கொண்டவர், 420 என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நிர்மல்குமார் விலகல் வடு காய்வதற்குள் பாஜக ஐடி விங்க் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி பிரிவு மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி மார்ச் 7-ம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இதற்கு பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவராக இருக்கக்கூடிய அமர் பிரசாத் ரெட்டி, அதிமுகவின் தலைமையைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், "நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரைக் கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவிட்ட அமர் பிரசாத் ரெட்டி, "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?, இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை" என குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலையின் மனசாட்சியான அமர் பிரசாத் ரெட்டி இது போன்று பேசுவது அதிமுக, பாஜக கூட்டணியில் விரிசை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்.. தமிழக பாஜக வார் ரூம் ரகசியம்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவை பிரச்சாரத்திற்கும், தேர்தல் பணிகளுக்கும் பயன்படுத்தவில்லை. அதற்கு அந்த தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு அதிகளவில் இருப்பததே காரணம் என கூறப்பட்டது. பல விவகாரங்களில் அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார், கே.பி.முனுசாமி, பொன்னையன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று வெளிப்படையாகக் கூறினார்கள். ஆனால் அப்போதெல்லாம் இரண்டு கட்சிகளுக்கு இடையே இவ்வளவு பெரிய மோதல் ஏற்படவில்லை.
ஒரு கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சிகளுக்குச் செல்வது என்பது அரசியலில் இயல்பான செயல். ஆனால் பாஜகவின் மாநில பொறுப்பிலிருந்த நிர்மல்குமார் அதிமுகவிற்குச் சென்றதால் ஏன் கருத்து மோதல் ஏற்படுகின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்மல்குமார் பல ஆண்டுகளாக பாஜகவில் பயணம் செய்துள்ளார். பாஜகவின் ஐடி விங்க் வளர்ச்சியில் நிர்மல்குமாருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் பல பதிவுகளை டிரெண்ட் செய்துள்ளார். ஐடி விக்கில் சிறப்பாகச் செயல்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் விருது வாங்கி இருக்கிறார்.
கடந்த 1.5 ஆண்டுகள் பாஜகவின் மாநில தலைமை மீது அதிருப்தியிலிருந்ததால் அக்கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய கறுப்பு முருகானந்தம், "எங்களுக்கும் ஆட்களை தூக்கும் செயல் தெரியும்" என தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோதல்களால் 2024-ல் நடைபெறக்கூடிய அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தவறு என்று அதிமுகவினர் கூறி வந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக பிரிந்து செல்ல முயற்சி செய்கிறது என்ற தோற்றம் உருவாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், "அதிமுக - பாஜக கூட்டணி பிளவின் விளிம்பில் உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலைக்கு எதிரான வழக்குப்பதிவு செய்யப்பட்ட போது, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அதிமுக சார்பாக எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. பாஜக மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரை அனுமதித்ததற்காக பாஜகவின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் அதிமுக மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தாலும், மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இருந்து வெளிப்படையான மௌனம் நிலவுகிறது. பல நிபந்தனைகளுக்காக இந்த கூட்டணி தொடர்ந்தாலும் களத்தில் அதிமுக வேலை செய்யாத நிலையே ஏற்படும்" என கூறினார்.
பாஜகவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களின் விமர்சனைகளை தலைமை கட்டுப்படுத்தாத வரை இந்த கருத்து மோதல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணி முறியும் பட்சத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்தார் பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார்