சென்னை:பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் (Uniq Production ) மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும், வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “2000-ல் என்னுடைய பயணம் தமிழில் தொடங்கியது.
சிவப்பதிகாரம் படத்தில் மன்னார்குடி பளபளக்க என்கிற பாடலுக்கு ஆடிவிட்டு வந்தபோது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. ஆனால் அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என அப்போது தெரியவில்லை. அதன்பிறகு நான்கு வருடங்கள் கழித்து தான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். என்னால் திருமணம் கூட பண்ண முடியவில்லை. என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கிறார்கள்.கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றுவதற்காக சின்னத்திரை சீரியல்களில் அம்மா வேடங்களில் நடித்தேன். ஆனாலும் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றார்.
2017ல் டைரக்சன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன். எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை குறித்து யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துக்களும் வரவில்லை.
இதை எழுதி முடித்ததும் இதை படமாக்க யாரை அணுகுவது என நினைத்த சமயத்தில் தான் எனக்கு ஒரு பெரிய தூணாக ஷார்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கை கொடுத்தது. இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.