தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் கைது

சென்னை அயனாவரம் பகுதியில் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை உறவினருடன் சேர்ந்து கொண்று விட்டு நாடகமாடிய மகனை உறவினர்களோடு போலீசார் கைது செய்தனர்.

Son killed father
தந்தையை கொன்ற மகன்

By

Published : Jun 10, 2023, 2:05 PM IST

சென்னை: அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (51). இவர் மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள ஒரு ஷோ ரூமில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், விக்னேஷ் (24) என்ற மகனும் உள்ளனர்.

முன்னதாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விக்னேஷ் தனது தந்தைக்கு சாதாரண செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் தந்தை சுகுமார் அதிக குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது செல்போனை டாஸ்மாக் பாரில் ஒரு நபர் பறித்துச் சென்று விட்டதாகவும், அதனை வந்து வாங்கித் தரும்படி தனது மகன் விக்னேஷிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது வீட்டிலிருந்த விக்னேஷ் மற்றும் அவரது தாயார், இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்றும், எனவே நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். மறுநாள் காலை சுகுமாரை எழுப்பியபோது, அவர் சுய நினைவு இல்லாமல் இருந்த காரணத்தினால் விக்னேஷ் மற்றும் அவரது தாயார் இருவரும் சேர்ந்து சுகுமாரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, அவரது முகத்தில் காயம் இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல், குடிபோதையில் கீழே விழுந்து விட்டார் எனக் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கும்படி கூறியதாகத் தெரிகிறது. பின்னர், அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்தத் தகவல் அயனாவரம் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அயனாவரம் காவல் துறையினர், சுகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தியபோது, ”தன் தந்தை மது போதையில் கீழே விழுந்து வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு நாங்கள் படுக்க வைத்தோம். மறுநாள் காலை சுயநினைவு இல்லாமல் இருந்தார். எனவே, நாங்கள் அவரை அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தோம்” என விக்னேஷ் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அயனாவரம் காவல் துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்து உள்ளனர்.

இதனையடுத்து கொடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில், சுகுமார் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சுகுமாரின் மகன் விக்னேஷை அழைத்து தீவிர விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களை அளித்துள்ளார்.

இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுகுமார் தொடர்ந்து கத்திக் கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அப்போது விக்னேஷ் மற்றும் அவரது மாமாவின் மகனான அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் (22) ஆகிய இருவரும் சுகுமாரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நேரத்தில், விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுகுமாரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரை சமாளிக்க முடியாமல் வாயில் துணியை வைத்து அழுத்தி, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று கீழே தள்ளி கழுத்தை நெறித்து உள்ளனர்.

அதன் பிறகு அவர் மயக்கம் அடைந்தவுடன் தூங்கி விட்டார் என நினைத்து அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். காலை எழுந்து பார்த்தபோது அவர் மயக்க நிலையிலிருந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து விக்னேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் அயனாவரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தாய் வெட்டிக்கொலை; மகள் படுகாயம்! தலைநகரில் ரவுடிகள் வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details