சென்னை :சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். அவ்வாறு முன்பதிவு செய்தாலும் பலருக்கு வெய்டிங் லிஸ்டிலே பெயர் இருக்கும், சிலர் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறிச் செல்வார்கள்.
இவ்வாறு வெளிமாநிலங்களுக்கு செல்ல வரும் வடமாநிலத்தவர்களை குறிவைத்து டிக்கெட் கவுன்ட்டர் அருகே ரயில்வே அதிகாரி போல ஒருவர் வெள்ளைத்தாளில் பயணிகளுக்கு போலி டிக்கெட்களை கொடுத்து பணம் பறித்து ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.
குறிப்பாக ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் வரும்போது தாங்கள் வைத்திருக்கும் டிக்கெட் போலி எனத் தெரிவித்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதால், கஷ்டப்பட்டு உழைத்து சொந்த ஊருக்கு தங்களது குடும்பத்தை பார்க்க செல்வோர் பணத்தை இழக்க நேரிடுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் ரயில்வே போலீசார் முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுன்ட்டர்கள் முன்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சென்ட்ரல் புறநகர் முன்பதிவு மையம் முன்பாக கையில் நோட்பேடு உடன் ஒருவர் நின்று ரயில் பயணிகளுக்கு போலி டிக்கெட் கொடுக்க முயன்ற போது கையும் களவுமாக ரயில்வே போலீசார், அந்த நபரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜிதேந்திர் ஷா(38) என்பதும், இவர் தற்போது கொடுங்கையூரில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
10ஆம் வகுப்பு வரை படித்த இவர் அவரது தந்தையின் நகைக்கடையில் கணக்கு எழுதும் வேலை பார்த்து, அவரது இறப்பிற்கு பின் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை யோசித்ததும்; அப்போது ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் டிக்கெட்டிற்காக வடமாநிலத்தவர்கள் அலைந்து திரிவதை பார்த்ததாக கூறும் ஜிதேந்தர், தனக்கு இந்தி தெரியும் என்பதால் அவர்களுக்கு முன்பதிவு மையத்தில் டிக்கெட் வாங்கி கொடுத்ததாகவும், அதற்கு கூடுதலாக பயணிகளிடம் பணம் பெற்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.