விழுப்புரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆயிரத்து 324 (1,324) விடுதிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 14 ஆண்கள் விடுதிகள், 7 பெண்கள் விடுதிகள் என அரசின் சொந்தக் கட்டடத்திலும், 3 விடுதிகள் வாடகைக் கட்டடத்திலும் இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா விடுதியில், போதுமான இடவசதி, நூலகம், சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம், ஊட்டச்சத்து உணவு போன்றவை கிடைக்காமல் மாணவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.