சென்னை: சமூகசேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள், நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்களை ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி சமூக சேவை விருதுக்கும், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 'சிறுதுளி' தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வனிதா மோகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குடியரசு தினத்தன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கவுள்ளார்.