சென்னை: தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலையம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய கூடை ஒன்றை எடுத்து வந்தார். இதைப் போன்ற கூடைகளில் வழக்கமாக, தாய்லாந்து நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் எடுத்து வரப்படுவதால், சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த பயணியை நிறுத்தி அவருடைய கூடையை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதிகாரிகள் சந்தேகப்பட்டது போலவே அவருடைய கூடைக்குள் அரிய வகை உயிரினங்கள் இருந்தன.
தென்கிழக்கு ஆஸ்திரேலிய வனப்பகுதியில் காணப்படும் சுகர் ரைடர் எனப்படும் பறக்கும் அணில் வகைகள் எட்டும், தென் அமெரிக்கா, பிரேசில், பெரு நாடுகளில் காணப்படும் மர்மோசெட் என்ற குரங்கு குட்டிகள் மூன்றும், தென் அமெரிக்கா வனப்பகுதியில் காணப்படும் தேகு லிசார்ட் என்ற ராட்சச பள்ளி குட்டிகள் மூன்றும் இருந்தன.
இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, பெசன்ட் நகரில் உள்ள வன குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தினார்கள். இவைகள் அனைத்துமே இந்தியாவுக்குள் கொண்டு வர தடை செய்யப்பட்டவைகள். மேலும் இவைகளினால் வெளிநாட்டு நோய் கிருமிகள் பெரும் அளவு இந்தியாவுக்குள் பரவி விடும் அதோடு சர்வதேச வன உயிரின துறையில் முறையான அனுமதி பெறவில்லை. இந்திய வனத்துறையின் அனுமதியும் இல்லை. இதை அடுத்து இந்த உயிரினங்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர்.