சென்னை: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (மார்ச்.22) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினர், இலங்கை இளைஞர்கள் இருவரையும் நிறுத்தி அவர்கள் உடைமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, பழமை வாய்ந்த நாணயங்கள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அந்த நாணயங்களை பற்றிக் கேட்டபோது அவர்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. எதற்காக இந்த நாணயங்களை எடுத்து வருகிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை. அந்த நாணயங்களின் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டு இருந்தது.
அவைகள் விலைமதிப்பில்லாதவை, தொல்லியல்துறை சம்பந்தப்பட்டவை என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் இருவரிடமிருந்த பழமையான 12 பழங்கால நாணயங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையும் வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.