சென்னை:பாரதி மகளிர் கல்லூரியில் இன்று(செப்.5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்னிலையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் "புதுமைப் பெண்" திட்டத்தையும், 26 "தகைசால் பள்ளிகள்", 15 "மாதிரிப்பள்ளிகள்" ஆகிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.
அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், '76 ஆண்டுகளைக் கடந்து கல்வித் தொண்டாற்றி வரக்கூடிய, உங்கள் பாரதி மகளிர் கல்லூரியில் ஒரு சில கட்டடங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
உங்கள் தேவையினை உணர்ந்து, உடனே, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 33 வகுப்பறைகள், 7 ஆய்வகங்கள், 2 நூலகங்கள் மற்றும் 3 ஆசிரியர் அறைகள் கொண்ட, தரைத்தளத்துடன் கூடிய 3 அடுக்குக் கட்டடம் கட்ட நான் ஆணையிட்டிருக்கிறேன். விரைவில் அந்தப் பணிகள் முடிந்து, அந்தக் கட்டடம் நிச்சயமாக உங்களுடைய பயன்பாட்டுக்கு வரும்.
பெண்கள் படித்தே ஆக வேண்டும்:கல்வி எனும் நீரோடை ஏழை - பணக்காரர், உயர்ந்தவர் - தாழ்ந்தவர், உயர்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி, கிராமம் - நகரம் என்ற எந்த வேறுபாடும், மாறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த அடிப்படையில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான்.
உயர்ந்த சாதியைச்சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும்; அதுவும் ஆண்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்று இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி பள்ளிகளையும் உருவாக்கியது, நீதிக்கட்சி தான். அந்தச் சமூகநீதியை, அரசியல்ரீதியாகக் காப்பாற்றியவர் தந்தை பெரியார். ஆட்சி ரீதியாக அதைக் காத்தவர்கள் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது.
ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கலாம்! இன்னும் சொல்லப் போனால், பெண்கள் படித்தே ஆக வேண்டும் என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கியது. அந்த வரிசையில் கல்வி, சமூகநீதி, பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். உயர் கல்வியிலும் பள்ளிக்கல்வியிலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச்சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
’புதுமைப் பெண்’ திட்டம்:பள்ளியில் படிக்க வரும் மகளிருக்கு, கல்லூரிக்கு வருவதற்குத் தடையும், தயக்கமும் இருக்கிறது. அந்தத் தடையை உடைப்பதற்குத்தான் இந்தப் புதுமைப்பெண் திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். படிக்க வைக்க காசு இல்லையே' என்ற கலக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது. இன்றைக்கு மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயண வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இது பெண்களுக்கு சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கி இருக்கிறது. இதனால், மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரை செலவு மிச்சம் ஆகிறது என்று பெண்கள் சொல்கிறார்கள். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதை நான் இங்கு பேசமாட்டேன். இதன் மூலமாக எத்தனை லட்சம் பெண்கள் சிறப்பு அடைகிறார்கள் என்பது தான் நம்முடைய இலட்சியம்! அந்த வகையில், அது ஒரு முதலீடுதான்!
அத்தகைய எண்ணத்தோடுதான் இந்த ’புதுமைப் பெண்’ திட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் என்று இதற்குப்பெயர். திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.
பெண்கள் எதற்கும் அடங்க வேண்டாம்..!:ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பதை அந்த மாணவியருக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவதை அரசு கடமையாக நினைக்கிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும், பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைகிறார்கள்.