சென்னை: தாம்பரம் அருகே முடிச்சூரில் கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக மக்களவைக் குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதில், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாவட்ட வருவாய் அலுவலர் இமானுவேல்ராஜ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த டி.ஆர்.பாலு கூறுகையில் , “ கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அந்த கருத்துகளுக்கு உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
நிதி பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நிதி பற்றாக்குறையை சரி செய்து கொடுக்க நானும் சட்டப்பேரவை உறுப்பினரும் அரசிடம் அல்லது எங்களது நிதியிலிருந்து கொடுத்து அந்த நிதிப்பற்றாக்குறை சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளோம்.
பொதுவாக முடிச்சூர் பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவது வழக்கம். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக இப்பகுதிகளுக்கு மூன்று முறை வந்து பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக்கேட்டறிந்து போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தடுப்புப்பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 17ஆம் தேதி பிரதமரை சந்திக்கின்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்திக்கின்றார். இதில் குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துகளைத்தெரிவிக்கவிருக்கிறார்.