தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த 6 பேர் குழு அமைப்பு- அமைச்சர் மா.சு! - புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்துவற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா சுப்பிரமணியன்
M subramanian

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 9:53 AM IST

சென்னை: மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளையும், பொருளாதார உதவிகளையும் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் உதவி புரியும் என்கிற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொது சுகாதார ஆராய்ச்சி - புதிய முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் - (Shifting Landscapes / Innovations in Public Health Research – Dissemination Workshop) கருத்தரங்கில், தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறைக்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்னர் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் தலைப்புகள் அடங்கிய புத்தகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டு, ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; "தமிழ்நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நூற்றாண்டை கடந்ததற்காக மிகப் பெரிய அளவில் மாநாடு நடத்தியது.

அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏற்ப 100 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த பொது சுகாதாரத்துறையில் 100 நாட்களில் 100 ஆய்வுகள் மேற்கொள்வது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வுகளை பொறுத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என்று முதல்நிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க:வழிப்பறி புகாரை விசாரிக்க சென்ற காவலருக்கு அச்சுறுத்தல்! கஞ்சா போதையில் கையை அறுப்பதாக காவலரை ஓடவிட்ட இளைஞர்கள்!

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முதல்நிலை மருத்துவ மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தாய்சேய் நலம், தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள், தரக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவச் சேவை போன்ற பல்வேறு வழிகளிலான ஆய்வுகள் செய்து அவர்கள் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். அந்த வகையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு 100 ஆய்வுகள் சமர்ப்பிப்பது என்பது என்று முடிவெடுக்கப்பட்டு முதற்கட்டமாக 40 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மருத்துவர்களின் படிப்பறிவு, பட்டறிவு ஆகிய இரண்டையும் கொண்டு அவர்கள் உருவாக்கி வரும் ஆராய்ச்சிகள் சமூகத்திற்கு மிகப் பெரிய அளவில் பயனளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 40 கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புத்தகம் மிக விரைவில் முழு கட்டுரைகளை உள்ளடக்கிய தமிழ் புத்தமாக மொழிமாற்றம் செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் வழிகாட்டி புத்தகமாக செயல்படுத்தப்பட உள்ளது.

பொது சுகாதாரத்துறையும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கியிருக்கிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எதிர்காலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளையும், பொருளாதார உதவிகளையும் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் உதவி புரியும் என்கின்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், இப்பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தைக் கொண்டு ரூ.50 கோடி செலவில் ஆராய்ச்சிக்கென புதிய கட்டிடம் அமைக்கலாம் என துணைவேந்தர் கூறியிருக்கிறார். மிக விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு இந்த மருத்துவப்பல்கலைக்கழக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் நூற்றாண்டு விழா கட்டிடமாக அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும்.

இதையும் படிங்க:NLC : தொழிலாளர்கள் கோரிக்கை மீது 8 வாரத்தில் முடிவு.. தொழிலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்!

முதலமைச்சராக கருணாநிதி இருந்தப் போது தான் 2009 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 23 ந் தேதி காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சி காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்யப்பட்டது. மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்யும் வகையில் மாற்றி அமைத்தார். அதோடு மட்டுமல்லாமல் அந்த திட்டம் 11.01.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு யுனெடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் என்கின்ற ஒன்றிய அரசின் காப்பீட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.7,730 கோடி என்கின்ற வகையில் 5 ஆண்டிற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆண்டொண்றுக்கு ரூ. 1,546 கோடி இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு யுனெடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தும்.

அரசு மருத்துவமனைகள் 853, தனியார் மருத்துவமனைகள் 969, என்று 1,822 மருத்துவமனைகளில் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள், 8 சிறப்பு அறுவை சிகிச்சைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை அறுவை சிகிச்சை, காது வால்வு நரம்பு உள் வைப்பு அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, செவிபுல மூளை தண்டு உள்வைப்பு அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு அறுவை சிகிச்சைகள் இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடல் உறுப்பு தானம் ஆகியவற்றின் சிறந்த செயல்பாட்டிற்காக THE BEST STATE என்கின்ற விருது தமிழ்நாட்டிற்கு தரப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தும் குழு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மக்களுக்கு 100 சதவீதம் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். தற்போது ஏறத்தாழ 1.43 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனர்.

காப்பீட்டுத் தொகை கடந்த ஆட்சி காலத்தில் ரூபாய் 2 லட்சமாக இருந்தது, தற்போது ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிகிச்சை முறைகள் கடந்த ஆட்சி காலத்தில் 1,450 ஆக இருந்தது, தற்பொழுது 1,513 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் எண்ணிக்கை 970 ஆக இருந்தது, அது தற்பொழுது 1,822 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரத்யேக சிகிச்சை முறைகள் கடந்த ஆட்சி காலத்தில் 2 ஆக இருந்தது தற்பொழுது 8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக புதுடெல்லி, National Health System Resource Centre-ன் முன்னாள் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் சுந்தரராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவின் உறுப்பினர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநில திட்டக் குழு ஆணையத்தின் உறுப்பினர் அமலோர்பவநாதன், ரேலா மருத்துவமனையின் முகமது ரேலா, காவேரி மருத்துவமனையின் அரவிந்தன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் என 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளது. ஆலோசனைகளை பெற்று மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிப்பறை நீர் வசதியுடன் சுத்தமாக இருக்கிறதா" - தலைமை செயலர் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details