சென்னை, பல்லாவரம் அடுத்துள்ள சங்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் சங்கர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான சிவாவையும், அவரது கூட்டாளிகளையும் காவலர்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்தக் கும்பலைச் சேர்ந்த அஜய் (22) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையில், மீண்டும் கஞ்சா விற்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக சிவா கஞ்சா வாங்க ஆந்திரா சென்றிருப்பதாகவும் அஜய் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாழடைந்த மண்டபம் ஒன்றில் பதுங்கியிருந்த சிவாவை, கையும்களவுமாக காவலர்கள் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.