சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது. இது குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு, விசாரணைக்கு நேரில் முன்னிலையாகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது.
ஆனால், குழந்தைகள் ஆணையத்தில் சிவசங்கர் பாபா தரப்பில் பள்ளி நிர்வாகி ஜனனி முன்னிலையானார். அப்போது பேசிய அவர், “ஜூன் மாதம் தொடக்கத்தில், டேராடூனுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவர் இன்னும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால் அழைப்பாணையை ஏற்று நேரில் முன்னிலையாக முடியவில்லை” என்றார்.
மேற்கூறிய காரணங்களுக்கான உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மூவர் சார்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 13ஆம் தேதி கேளம்பாக்கம் காவல் துறையினர், சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், குற்றச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பள்ளி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மேலும், புகாருக்குள்ளான சிவசங்கர் பாபா, டேராடூனில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கிற்கு சிபிசிஐடி காவல் துணைக்கண்காணிப்பாளர் குணவர்மன், ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் விசாரணை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக வழக்கு தொடர்பான புகார், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, புகார் அளித்தவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறித்த உண்மைத்தன்மையைக் கண்டறிந்து, சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கேரள தங்கம் கடத்தல் வழக்கு: முக்கியக் குற்றவாளி கைது