சென்னை:அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில், 8வது தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, ஆயுர்வேத விழிப்புணர்வு கையேட்டினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தொடர்ந்து டாம்ப்காலின் புதிய தயாரிப்பான தீபாவளி லேகியத்தை அறிமுகம் செய்தார்.
8வது தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆயுஷ் பட்டயp படிப்பு மாணவர்களுக்கு பரிசுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆயுர்வேத தினம் நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. டாம்ப்கால் என்கிற இந்திய மருத்துவ முறையின், மருந்து தயாரிப்பு மையம் இந்தியாவிற்கே வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் கீழ் தயாரிக்கப்பட்ட செரிமானத்திற்கு உதவும் தீபாவளி லேகியம், இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கதாநாயகன் அடி வாங்கினாலும் கடைசியில் வில்லனை ஒரே அடியில் வீழ்த்தி விடுவார் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!
சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய அனைத்தும் பழங்காலப் பாரம்பரிய மருத்துவ முறையாகும். ஒவ்வொரு மருத்துவத்தையும் பல்வேறு மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
யுனானி மருத்துவத்திற்கு இளங்கலைப் படிப்பு இருந்தது, தற்போது முதுகலைப் படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பாரம்பரிய மருத்துவத்திற்கு அரசு பெருந்துணையாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த படிப்புகளை முடித்த மருத்துவர்கள், அவரவர் சார்ந்த துறையில் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதனைத் தாண்டி அவர்கள் அலோபதி மருத்துவ முறைகளை பயன்படுத்தி மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும்.
அவ்வாறு கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 1 வாரத்தில் மட்டும் 3 மருத்துவமனைகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, நலம் மருத்துவமனையின் மீது இது தொடர்பாக புகார் பெறப்பட்டது. உடனடியாக இணை இயக்குநர் (சட்டம்) விசாரணை மேற்கொண்டு புகார் உண்மை என்று கண்டறிந்து, அந்த மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அனைத்து மாவட்ட இணை இயக்குநர்கள் தலைமையிலான குழுவினை அமைத்துள்ளார். இந்த மருத்துவ குழுவினர், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்டறியவுள்ளனர். அப்படி விதிமீறல் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழகத்தில் புதிதாக 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டம்" - அமைச்சர் எ.வ.வேலு