தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

பிரசவத்துக்குச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

state human rights commission
Doctors 'leave' scissors in woman's stomach during surgery

By

Published : Jun 8, 2021, 7:48 PM IST

Updated : Jun 8, 2021, 8:57 PM IST

சென்னை: சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த விவகாரம் தொடர்பாக, நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகேயுள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. தனியார் நிறுவன காவலாளியான இவரது மனைவி குபேந்திரி. இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதன் பின் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்தபோது, குபேந்திரியின் வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து மனைவியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாலாஜி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம்(இ-மெயில்) புகார் அனுப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இவ்விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

Last Updated : Jun 8, 2021, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details