சென்னை:2015ஆம் ஆண்டு பெய்த மழையால் 4 நாட்களுக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது எனவும், அதை விட அதிக மழை பெய்த போதும் அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை என்று கூறிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார், மின்வாரிய இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் இன்று (டிச. 5) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முகாம்களில் 32,188 பேர்:அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "மிக்ஜாம் புயல் நேற்று இரவு சென்னையை கடந்து வடக்கு நோக்கி நகர்ந்தது. 72 மணி நேரத்தில் 48 மணிநேரம் கனமழை பெய்ததன் காரணமாக, மழைநீர் தேங்கினாலும் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. 23.5 அடி தண்ணீர் செம்பரம்பாக்கத்தில் உள்ளது. 32,188 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். சென்னை , திருவள்ளுர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் கொடுக்கப்படுள்ளன. மீனவர்களின் 30 படகுகள் முழுவதுமாகவும், 90 படகுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
தேங்கிய நீரை மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணி தீவிரம்: மீட்புப் பணியில் 139 படகுகள் சென்னை, தாம்பரம், ஆவடி பகுதியில் பயன்பாட்டில் உள்ளது. மழைநீர் வடிந்த பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. நீர் வடிய வடிய மீதமுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் கொடுக்கப்படும். 80% மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீர் வடிந்ததும் சாலைகள் சுத்தப்படுத்தப்படும். 1000 மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றப்படுகிறது. 93 பம்புகள் பிற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.
சென்னையிலிருந்து விரைந்து நீரை அகற்றும் பணி நடைபெறும் நிலையில் மணப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் பகுதிகளில் படகுகள் பயன்படுத்தபடுகிறது. மீட்பு வாகனங்கள் பணியில் உள்ளன. 215 அழைப்புகளில் இதுவரை, 180 அழைப்புகளை சரி செய்துள்ளோம். மாநகர பேருந்து செல்லும் வழித்தடத்தில் நீர் அகற்றப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 197 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 191 மரங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. ஆவடி பாதிப்பு அதேபோல், தாம்பரம் மாநகராட்சியும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்ப பணிகள் மேற்கொள்கிறோம்.
படிப்படியாக மின் விநியோகம்: 1,812 மொத்தம் மின்பாதைகளில் 1610 மின் பாதைகள் சரிசெய்யப்பட்டுள்ளது. மின்பாதைகளில் பிரச்சனை இல்லை. பாதுகாப்பு கருதியே நிறுத்தி வைத்துள்ளோம். மிதமுள்ள பகுதியில் நீர் வடிந்ததும் மின் விநியோகம் வழங்கப்படும். நேற்று மரங்கள் விழுந்த இடங்களில் அகற்றப்பட்டு போக்குவரத்து முக்கிய சாலைகளில் சீராக உள்ளது. 7000 பேருக்கு வீட்டுற்கு சென்று உதவிகள் செய்துள்ளோம்.
சவால்கள் இருப்பினும், பேருந்துகள் தேவைக்கேற்ப இயக்கம்: கட்டுபாட்டு அறை மூலமாக செய்தி வரும்போது, அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கிறோம். சென்னையில் 800 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 406 பேருந்துகள் திருவள்ளுரிலும் செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70% பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மெட்ரோவில் 88 ஆயிரத்து 370 பேர் பயணித்துள்ளனர். சவால்கள் இருந்தாலும், விடுமுறை தின அட்டவணைபடி மெட்ரோ ரயிலை இயக்கினோம்.