தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிப்பறை நீர் வசதியுடன் சுத்தமாக இருக்கிறதா" - தலைமை செயலர் அதிரடி உத்தரவு! - chennai Chief Secretary

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிப்பறைகள் நீர் வசதியுடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா என ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Shiv Das Meena
சிவ் தாஸ் மீனா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 7:33 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிப்பறைகள் நீர் வசதியுடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்பதையும், மருத்துவ உபகரணங்களின் பராமாரிப்பு மற்றும் அவற்றின் செயல் திறனை உறுதி செய்தல், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவற்றை தொடர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எழுதியுள்ள கடிதத்தில், "அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் முதுகெலும்பாக திகழ்கின்றது. இச்சேவையை தடையில்லாது வழங்கவும், நல்ல தரமான மருத்துவ சேவை வழங்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்வது முக்கிய கடமையாகும்.

இந்த ஆய்வுகளினால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைத்திடவும், இந்நிலையங்களில் நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள், மருந்தாளுனர்கள், துணை செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற நோயாளிகள் பதிவேட்டை ஆய்வு செய்தல், இம்மருத்துவ நிலையங்களில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தரப்படும் மருத்துவ சேவை, பிரசவங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணித்தல், கருத்தடை திட்டங்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய விவரத்தை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி முறையாக போடப்படுகிறதா என்பதை உறுதி செய்தல், தாய் - சேய் நலத்திற்கான விரிவாக்கப்பட்ட சிறப்புத் திட்டத்தை (ESP) வழங்கப்படுவதை ஆய்வு செய்தல், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்தல், தொற்றா நோய்களான கர்ப்பபை வாய் பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களின் நிலையை அறிதல்.

மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கண்காணித்தல், தரவு மேலாண்மை மற்றும் அறிக்கை தயாரித்தல், தாய் - சேய் ஆரோக்கியத்தின் நிகழ்நேரக் கண்காணிப்புக்கான (PICME) உள்ளீடுகளை ஆய்வு செய்தல், நகரும் சுகாதார அமைப்புகள் செயல்படும் விதம் மற்றும் பள்ளி சிறார் திட்டத்தினை (RBSK) மதிப்பாய்வு ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகள், கட்டடத்தின் நிலை மற்றும் தூய்மை உள்ளிட்ட ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை ஆய்வு செய்தல். கழிப்பறைகள் நீர் வசதியுடன் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்தல் வேண்டும். மருத்துவ உபகரணங்களின் பராமாரிப்பு மற்றும் அவற்றின் செயல் திறனை உறுதி செய்தல், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவற்றின் இருப்பு ஆகிய பணிகளை உறுதி செய்ய வேண்டும்.

தங்களுடைய தொடர் ஆய்வுகளினால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்து தேவைப்படும் மருத்துவ வசதிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, இந்நடவடிக்கை தொடர்பான அறிக்கையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளருக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து அரசினுடைய மேலான கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்" என அக்கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: "ஜல் ஜீவன் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது" - கரூரில் மக்கள் எதிர்ப்பால் திணறும் அதிகாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details