கோவாவில் ஐந்து நாள்கள் இடைவெளியில் மூன்று சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருப்பது அம்மாநிலம் முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பெனாலிம் கடற்கரையில் இரண்டு சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்துள்ளார்.
”சிறுமிகள் ஏன் இரவு நேரத்தில் வெளியே சென்றனர்” எனக் கேள்வி எழுப்பிய அவர், ”குழந்தைகளின் பாதுகாப்பைப் பெற்றோரே உறுதிசெய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
சமூகம் பெரும்பாலும் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் உடை, செயல்பாடு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே கேள்வி எழுப்புகிறது என்பதை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கோவா முதலமைச்சர் தனது கேள்விகளால் உறுதி செய்துள்ளார்.
பாலின சமத்துவம்
அதே சமயம் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் ஆண்கள், அவர்களது பெற்றோரிடம் கேள்வி எழுப்புவதை வசதியாக மறந்துவிடுவதையும் அவரது கூற்று தெளிவாகக் காட்டுகிறது.
முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இந்தக் கருத்துகள் சர்ச்சையான நிலையில், கோவா முதலமைச்சர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார். அதில், சிறார்களின் பாதுகாப்புக்கு பெற்றோர், அரசு என்று அனைவருமே கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல் சார்ந்த வன்முறைகளுக்கு ஆண்களின் அதிகாரமய சிந்தனையும் காரணம் என்கிறார் வழக்கறிஞர் நிர்மலாராணி.
”பெண்களை உடமையாகப் பார்க்கும் பழங்கால கண்ணோட்டமும், ஆண்களின் அதிகாரத்தைச் செலுத்த நினைக்கும் பண்பும்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம். பாலியல் வன்புணர்வு சார்ந்த வழக்குகளில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனப் பலரும் கோருகிறார்கள்.
கேள்விக்குறியான பெண் பாதுகாப்பு
பல நேரம் பெண் காவலர்களும், பெண் நீதிபதிகளும்கூட பாதிக்கப்பட்ட பெண்களை இழிவாகப் பேசுவது, மோசமாக நடந்துகொள்வது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
ஆணாதிக்க சமூகத்தில் வளரும் பெண்களும் ஆண்மய சிந்தனையில்தான் வளர்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பாலியல் அத்துமீறல்களை சமூகக் கண்ணாடியுடன் பார்க்காமல் சட்டக் கண்ணாடியுடன் பார்க்க வேண்டும்.
சட்டத்தில் பாலின பாகுபாடு காட்டவும், பாலியல் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் செயல்பாடுகள் குறித்து தேவையில்லாமல் கேள்வியெழுப்பவும் இடமில்லை” என அழுத்தமாக தனது கருத்தைச் சொன்ன நிர்மலாராணி, பாலியல் குற்றங்களைச் சட்டரீதியாக அணுகுவது குறித்து நமக்கு விளக்குகிறார்.
சிறார் வதையை பதிவு செய்வது அவசியம் சட்ட நடவடிக்கை
”நாட்டில் பாலியல் வன்புணர்வுகள் நிகழாமல் தடுக்க, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதுமானது என்றாலும், அதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
பாலியல் வன்புணர்வு வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் இதற்காக நீதி கேட்டு சட்டப் போராட்டத்தை நடத்தி, அதைவிட மோசமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பாலியல் வன்புணர்வுக்குள்ளான மூன்று வயது குழந்தை முதல் 70 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி வரை அவர்கள் சந்தித்த பிரச்சினைகளை ஆய்வு செய்தோம். வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்கள் secondary victimization செய்யப்படுவது உறுதியானது.
ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
பாதிப்புக்குள்ளான பெண்களை காவல் துறையினர், மருத்துவர்கள், நீதிபதிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் secondary victimization செய்கிறார்கள். அதாவது மீண்டும் ஒருமுறை பாதிப்புக்குள்ளாக்குகிறார்கள்.
இந்நிலை தொடராமல் நவீன புலனாய்வு முறைகளைப் பயன்படுத்தி பாலியல் வன்புணர்வு வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் வன்புணர்வு நடந்ததும் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டுவது காலங்காலமாக நம்மை அறியாமல் நமக்குள்ளே புகுத்தப்பட்டுள்ள புனைவுகளின் வெளிப்பாடு. இதை மாற்ற அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பாலியல் சமத்துவப் பார்வை குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும்” எனத் தீர்க்கமாகச் சொல்கிறார் நிர்மலாராணி.
வழக்கறிஞர் நிர்மலாராணிபேட்டி பாலின சமத்துவம் தேவை இங்ஙனம்!
கனடா நாட்டில் 'மென் அகெயின்ஸ்ட் ரேப்' என்னும் அமைப்பின் மூலம் ஆண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராகப் போராடிவருவதை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர் நிர்மலாராணி, இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண பாலியல் தாக்குதல்களுக்கு எதிராக ஆண்களையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
பாலின சமத்துவத்தை பரவலாக்காமல் இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது கடினமே. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மட்டுமே காலத்தின் தேவை!
இதையும் படிங்க: எல்லை பாதுகாப்பில் அசத்தும் பெண் ராணுவ வீரர்கள்