சென்னை:தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், பிஸ்கெட் வியபாரம் செய்துவருகிறார். இவருக்கும், கோட்டூர்புரம் குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் மாமியார் வீட்டுக்குச் செல்லும் தினேஷ், அதே குடியிருப்பில் வசிக்கும் 21 வயது மன வளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அண்டை வீட்டார் என்பதால் மன வளர்ச்சி குன்றிய அப்பெண் தினேஷின் மனைவியை அக்கா என்றும், தினேஷை மாமா என்றும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோட்டூர்புரத்திற்கு வந்த தினேஷ், தனது மனைவியை யூ.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் விட்டுவிட்டு மாமியார் வீட்டில் இருந்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
அப்போது தினேஷ் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை குடியிருப்பின் இரண்டாவது தளத்திற்கு வரவழைத்து, ஆபாசப் படங்களைக் காட்டி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணின் தாய் மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில காவல்துறையினர் பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தினேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் டிக்-டாக் பெண்ணுக்கு எதிர்ப்பு - உடைகளை கிழித்து மானபங்கம்