சென்னை: திருவான்மியூரில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய கல்லூரி கலாஷேத்ரா பவுண்டேஷன். இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் இந்த கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மூத்த ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளம் மூலமாக ரகசியமாக பேசி வந்துள்ளனர்.
இதை பற்றி தகவலறிந்த கலாக்ஷேத்ரா நிர்வாகம், பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் கமிட்டி மூலம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. விசாரணையில் நிறுவனத்தின் பெயரை கெடுக்கும் வகையில் மாணவிகள் தரப்பிலிருந்து பொய்யான புகார்கள் வந்திருப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மூத்த ஆசிரியருக்கு மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் அன்று கலாஷேத்ரா நிர்வாகம் கௌரவித்து விருது வழங்கியது. இதற்கு மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திராபாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கலாஷேத்ரா கல்லூரியில் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மற்றும் முறையாக நடவடிக்கை எடுக்காத கலாக்ஷேத்ரா இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யவும் நோட்டீஸில் தெரிவித்துள்ளனர்.
கலாஷேத்ரா மூத்த ஆசிரியர் மீது பாலியல் புகார்; டிஜிபிக்கு விசாரணை நடத்த நோட்டீஸ் பாலியல் புகாரில் விரிவான விசாரணை நடத்தி தேசிய மகளிர் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால் தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை கையில் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவிலேயே இந்த புகார் உண்மையா அல்லது பொய்யா என்பது தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த சம்பவம் சென்னையில் தான் - காஷ்மீரிலிருந்து கிளம்பிய லியோ படக்குழு