சென்னை:மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, வெள்ளக்காடாக மாறிய சென்னை தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 5 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரத்து 530 கிலோ மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றபட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், “மிக்ஜாம் புயலில் ஏற்பட்ட வெள்ளம் மீட்புப் பணி மற்றும் வெள்ளம் பாதித்த இடங்களில் பணி சவாலாக இருந்தாலும், சென்னை மாநகராட்சிக்கு சவாலாக இருக்கும் பணி என்பது குப்பைகளை அகற்றும் பணிகள் தான்.
சென்னை வரலாற்றில் இதுவரை இல்லாத குப்பைகள் நேற்று (டிச.12) அகற்றப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மட்டும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 10,464.97 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதுவே ஒரே நாளின் அதிக அளவு ஆகும். 6ஆம் தேதிக்கு பிறகு, தினந்தோறும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றும் நிலை மாறி, 7 ஆயிரம் மெட்ரிக் டன் முதல் 9 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் நிலையானது இருந்து வருகிறது. ஆனால், நேற்று மட்டும் 10,464.97 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம்.
மேலும் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மொத்தமாக 57,192.63 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். இது மட்டுமின்றி தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது” என கூறியுள்ளார்.