சென்னை:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், அங்கு இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா உள்ளிட்ட 7 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஏப்ரல் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், “ஆசிரமத்தில் இருந்து 167 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள், அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களிலும், தனியார் காப்பகங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஆதரவற்றோர் இல்லம் நடத்தியதன் மூலம் மனுதாரர்களுக்கு என்ன பலன் கிடைத்தது?” என கேள்வி எழுப்பினார். இதற்கு காவல் துறை தரப்பில், பல்வேறு இடங்களில் இருந்தும் நிதி பெறுவதாகவும், உடல் உறுப்பு விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது எனவும், அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.