தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாலியல் தொல்லை குறித்து அச்சமின்றி மாணவிகள் தெரிவிக்க குழு அமைத்திடுக' - complaint box should setup in schools

பாலியல் தொல்லை குறித்து மாணவ, மாணவிகள் அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் பெண் நிபுணர் அடங்கிய குழுவும், புகார் பெட்டியும் அமைத்திட தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://10.10.50.85//tamil-nadu/17-July-2021/tn-che-internalcorepanelforharassment-script-7204624_17072021193459_1707f_1626530699_254.jpeg
சென்னை

By

Published : Jul 17, 2021, 8:26 PM IST

சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகர் எஸ். ஜெயசீலன், அதே வளாகத்தில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமியிடம், இயேசுநாதரின் கதைகளைக் கூறுவதாக வீட்டிற்கு அழைத்து, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், போதகர் ஜெயசீலனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயசீலன் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், 12 வயது மாணவியிடம் மத போதகர் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தண்டனை உறுதிசெய்தும், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடிசெய்தும் தீர்ப்பளித்தார். போதகர் ஜெயசீலனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது, அதுகுறித்து புகாரளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என மாணவிகள் அச்சம் கொள்கின்றனர்.

அதனால், அனைத்துப் பள்ளிகளிலும், சமூக நலத் துறை அலுவலர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் பெண் வல்லுநர், அரசு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலர் மாதம் ஒருமுறை பள்ளிகளுக்குச் சென்று மாணவிகளின் புகார்களைக் கேட்டறிய வேண்டும். சுதந்திரமாக புகார் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும். அதன் சாவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

வாரந்தோறும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலருடன் சென்று புகார் பெட்டியில் உள்ள புகார்களை ஆய்வுசெய்து, முகாந்திரம் இருந்தால், அதன் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறைக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details