சென்னை: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கோவிஷீல்ட் என்ற தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கரோனாவை தடுக்கும் முழுமையான சக்தி வாய்ந்ததாக இந்த ஊசி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தேர்வு செய்துள்ளது. இந்தத் தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை செய்யப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி டி செல்கள் என அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாள்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்துவிடும். அடுத்த 28 நாள்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலில் உருவாக்கிவிடும். தற்போது நடத்தப்படும் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்ட தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
150 தன்னார்வலர்கள் தேர்வு
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது, "தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்காக 150 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு கரோனா வைரஸ் உள்ளதா என்பது குறித்தும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறித்தும் பரிசோதனை செய்வோம். அவரது உடம்பில் வேறு ஏதாவது நோய்கள் உள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்வோம்.
180 நாள்கள் பரிசோதனை
மருந்து பரிசோதனை செய்வதற்கான விதிகளின்படி அந்த தன்னார்வலர் உடலளவில் பொருத்தமாக அமைய வேண்டும். அதன் பின்னர் தன்னார்வலருக்கு தடுப்பூசி மருந்து செலுத்துவது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி, எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் ஒப்புதலையும் பெறுவோம். தடுப்பூசி மருந்தை யாருக்கு தருகிறோம் என்பது தெரியாத வகையில் அளிக்கப்படும். அவர்களுக்கு இரண்டு தடவை தடுப்பூசி மருந்துகள் அளிக்கப்படும். தொடர்ந்து 180 நாள்கள் அவர்களை கண்காணிப்போம்.
பரிசோதனைக்கான பணி தொடங்கியது
அவ்வாறு கண்காணிக்கும் போது, தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பாதிப்புகளை கண்டறிய முடியும். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் தனித்தனியாக தடுப்பூசி அளிக்கப்பட்டு அதன் விவரங்கள் சேகரித்து வைக்கப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் பரிசோதனை செய்வோம். தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. தன்னார்வலர்களை விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படுவார்கள். யாருக்கு முன்னுரிமை அளிக்காமல் தேர்வு செய்யப்பட வேண்டும். கரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களுக்கு இந்தப் பரிசோதனை 180 நாள்கள், 6 மாதம் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க:கழிவறையிலும் ஆக்சிஜன் வசதி: கரோனாவை டீல் செய்யும் அரசு ராசாசி மருத்துவமனை