சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரது அமர்வில் இன்று (ஜூலை 28) மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, “அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை.
ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் தெரிவிக்கிறது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க, எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என வாதிட்டார்.
தேர்ந்தெடுத்த வாக்காளர்களால் நீக்க முடியாத மக்கள் பிரதிநிதியை, நீதிமன்ற வழக்கு மூலம் நீக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். சட்டப்பேரவை உறுப்பினர்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுவதாகவும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், அமைச்சர்கள் 76 ஆயிரம் ரூபாய் தான் பெறுகின்றனர் எனவும் அவர்களுக்கு பயண சலுகைகள் உள்ளன என்றார்.