சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றம் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நாடாளுமன்றம் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றம் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சுழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் அதுதொடர்பான ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.